web log free
January 11, 2025

தலைமன்னாரில் பேருந்து ரயிலுடன் மோதி விபத்து: ஒன்பது வயது சிறுவன் உயிரிழப்பு, 25 பேர் வரையில் காயம்

அனுராதபுரத்தில்  இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்து தலைமன்னார் பியர் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் என 25 பேர் வரையில் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.இதன் போது குறித்த விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த விபத்து சம்பவத்தை அறிந்த மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை சூழ்ந்து கொண்டனர்.

இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக குருதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற  நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd