தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகச்சந்திப்பு ஒன்றில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஊடாக தண்டனை சட்டக்கோவை, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் இன்று பிற்பகல் அறிவித்திருந்தார்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்றஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அசாத் சாலி நாட்டின் சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.