தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைக்கு தடை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் எந்தவகையிலும் ஜெனிவா அமர்வுகள் தாக்கம் செலுத்தாது. உலக நாடுகள் பலவும் புர்காவை தடை செய்துள்ளன. இலங்கை மாத்திரம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நேற்று(17) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
புர்கா தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கடந்த 10 - 15 வருடங்களுக்குள் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்கள் தொடர்பில் இவ்விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நீண்ட காலமாக முஸ்லிம் மக்களுடனான சுமூக உறவு பேணப்படுகிறது. அதில் எவ்வித சிக்கலும் காணப்படவில்லை.
எனினும் அண்மைக்காலமாக புர்கா உள்ளிட்ட பல வியடங்களில் கலாசார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விடயங்கள் ஏதேனுமொரு வகையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்ற அடிப்படையில் உலகின் பல நாடுகள் இவற்றை தடை செய்துள்ளன. எனவே, இது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பிலும் உரிய காலத்தில் அவசரமின்றி தீர்மானிக்கப்படும்.
ஜெனிவா அமர்விற்கும் புர்கா விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது உள்நாட்டு பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். எனினும், சர்வதேச ரீதியில் பல நாடுகள் இவற்றை தடை செய்துள்ளன. பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகக் கருதியே உலக நாடுகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. எனவே இலங்கை தேசிய பாதுகாப்பை மாத்திரம் கருத்திற் கொண்டு தான் இது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது.
முஸ்லிம் சமூகத்தினர் , முஸ்லிம் தலைவர் மற்றும் அரசாங்கம் உள்ளிடவற்றில் அரபு மொழி கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. அத்தோடு மத்ரசா பாடசாலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது மிக முக்கிய விடயம் என்பதால் துரிதமான தீர்மானங்களை எடுக்க முடியாது. புர்கா மற்றும் நிஹ்காப் ஆகிய இரண்டு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.