வடக்கில் தனித் தமிழீழம் உருவாக்கப்பட முழு ஆதரவையும் வழங்குவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் சொல்லப்பட்டுள்ள விடயம் மீது அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையில் ஈழநாடொன்றை உருவாக்குவதற்கான முழு ஆதரவையும் வழங்கப்போவதாக பாரதிய ஜனதா கட்சி நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பானது தென்னிலங்கையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
பாரதிய ஜனதா கட்சியின் கிளையை இலங்கையில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்தக்கட்சியின் பிரதிநிதிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
இதற்கெதிரான இலங்கையில் குறிப்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே பாரதிய ஜனதா கட்சியின் ஈழநாட்டுக் கருத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த விவகாரம் குறித்து கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கருத்து வெளியிடப்பட்டது.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிடுகையில்,
இது புதிய விடயமல்ல. தென்னிந்தியாவின் தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்களின் விவகாரம் பிரதான தேர்தல் பிரசாரமாக காணப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விடும். ஈழம் தொடர்பில் இந்திய அரசியல் கட்சி குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்படும் கருத்திற்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.
கால காலமாக இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. பாரிய போராட்டத்திற்கு மத்தியில் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, நாட்டில் இனியொருபோதும் பிரிவினைவாத செயற்பாடுகள் எவ்வழிகளினாலும் தோற்றம் பெறாது. விசேடமாக வடக்கு, கிழக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இரகசியமாகவும், சட்டரீதியாகவும் இங்கு வந்து சென்றிருக்கின்றனர். எமது நாட்டு வெளிநாட்டுக் கொள்கையை ஸ்திரப்படுத்தி முன்நகர்வதே எமது செயற்பாடாகும் என்றார்.