web log free
January 11, 2025

பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று  (17) பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தைவாய்ப்பு தொடர்பில் இடம்பெற்ற மறுஆய்வு கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகை, பெரிய வெங்காயம்,சின்ன வெங்காயம், கிழங்கு, மரக்கறி மற்றும் பழங்கள் போன்றே எரிவாயு நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் விநியோக வலையமைப்பு சீர்குலைதல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கோரியுள்ளமை என்பன தொடர்பிலும் வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன அவர்கள் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள், உள்ளூர் நுகர்வுக்கு போதுமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், புத்தாண்டு காலத்தில் காய்கறி விலை குறையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ அவர்கள், கொவிட் -19 தொற்றுநோயுடன் உலக எரிவாயு விலை வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இலாபம் ஈட்டப்பட்டதாகவும், அக்காலத்தில் தனியார் துறை ஊழியர்களின் வேலைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தற்போது உதவி வழங்குவது கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷஷீந்திர ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, அருந்திக பெர்னாண்டோ, ஜானக வக்கும்புர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd