அரசியலமைப்பு ரீதியாக இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இலங்கையை நிர்வகிப்பதற்கு மறைமுகமான சதி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மேலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் வடக்கு மற்றும் தென் பகுதிகளுக்கு மேற்கொண்டுள்ள பயணங்களுக்கான நோக்கத்தினை தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பாரதிய ஜனதாக கட்சி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் , அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி தமிழ் நாட்டில் அதிகாரத்திலுள்ளது. குறித்த கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் ஈழ ஆட்சியை ஸ்தாபிப்பது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரட்டை குடியுரிமையுடையவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையில் ஈழ இராச்சியம் அமைக்கப்படும் என்று கூறும் கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சிங்கள மொழியிலும் பேசிக் கொண்டு, யாழ்ப்பாணம் மற்றும் காலி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது நாட்டில் காணப்படும் பாரிய சவாலாகும். போலியான தேசப்பற்று தொடர்பில் கூறிக் கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கம், இந்தியாவிற்கு அடிபணிந்துள்ளமையின் காரணமாகவா இது தொடர்பில் அவதானம் செலுத்தாமலுள்ளது? உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் செயற்பாடுகளுக்கான காரணம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.
இரட்டை குடியுரிமையுடையவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிப்பதன் ஊடாக, வடக்கு கிழக்கினுள் ஈழ இராச்சியத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகுவதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதற்கமைய அரசியலமைப்பினூடான அதிகாரத்துடன் இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இலங்கையை நிர்வகிப்பதற்கு மறைமுகமான சதி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திற்கு இவ்வாறானதொரு நிலைமையை நாட்டில் ஏற்படுத்துவதற்கான தேவை காணப்பட்டாலும் , நாட்டின் பிரதான எதிர்கட்சி என்ற ரீதியில் மக்கள் மத்தியில் சென்று நேரடியாக இது தொடர்பில் தெளிவுபடுத்துவோம். இதன் மூலம் எமது நாட்டின் ஒற்றுமை, சுயாதீனத்தன்மை, இறையான்மை , புவியியல் ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கான போராட்டத்தை கீழ் மட்டத்திலிருந்து முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்றார்.