குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய - ரத்மலேவத்த பிரதேத்தில் உள்ள பௌத்த மக்கள் அதிகநேரம் வழிபாட்டில் ஈடுபடும் அரச மரத்தடியிலுள்ள புத்தர் சிலை நேற்று முன்தினம் அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் நேற்று (19) குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர். இது தொடர்பில் விசாரணையை நடத்திய பொலிஸார், அப்பிரதேசத்தில் உள்ள இந்தியப்பிரஜை ஒருவரை கைது செய்தனர்.
குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாலை 02 மணியளவில் புகைப்பிடிப்பதற்காக புத்தர் சிலைக்கு அருகே உள்ள விளக்கின் உதவியுடன் தீ பெற்றுக்கொள்ளச் சென்றதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் இருவர் அங்கு நடமாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் சட்டரீதியான வீசா அனுமதி இருந்துள்ளதை தெரிவித்த குளியாப்பிட்டிய பொலிஸார், அவர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து குளியாப்பிட்டிய பிரதேசத்தில் திருமணம் முடித்தவர் என்றும் குறிப்பிட்டனர்.