web log free
January 11, 2025

இலங்கை - பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும்  இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில்   இன்று (2021.03.20)  டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம், முதலீடு,சந்தை, தொழிநுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு  ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்து  கவனம் செலுத்தப்பட்டன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில்  பங்களாதேஷ்  நாட்டு பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா பாராட்டினை தெரிவித்தார். சார்க் அமைப்பு  கொவிட்-19 அவசர நிதியத்தின்  ஊடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வைத்திய உபகரணங்களை வெகுவிரைவில் இலங்கைக்கு வழங்கும் என பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா உறுதியளித்தார்.

அடுத்த வருடம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமான விஜயத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனாவிற்கு அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பினை பங்களாதேஷ் பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

கடந்த காலங்களில் பங்களாதேஷிற்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை  சிறந்த முறையில் செயற்படுத்த ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் காலநிலைக்கு பொருந்தும் வகையிலான நெற் பயிரை இலங்கைக்கு வழங்கவும்,அந்நாட்டில் நன்னீர் மீன்பிடி கைத்தொழிலை மேம்படுத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்கவும்  இரு தரப்பின்  பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பங்களாதேஷ்  மற்றும் இலங்கைக்கு இடையில் மத்திய வங்கியின் சேவை, தொழிநுட்பத்துறை கட்டமைப்பை பரிமாற்றிக் கொள்ளல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுப்படுத்தப்பட்ட அரசியல்  உறவுகளை பலப்படுத்துவது  தொடர்பிலான யோசனைகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

தீவிரவாதம்  மற்றும் மனித கடத்தல் வியாபாரம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்க  தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன.

இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதன் பின்னர் இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில்  இலங்கை- பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இச்சந்திப்பின் போது இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்யல், விவசாயத்துறை,திறன் அபிவிருத்தி பறிமாற்றல்,சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம்,அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்றம் செயற்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd