மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, கூட்டணியாக பயணிப்போம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை மீளப்பெறுவதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபை ஆகியன ஒப்புதல் வழங்கிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபையின் கூட்டம் கூடியது. இதன்பிறகே இந்த கருத்தை இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறியவை வருமாறு,
தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே, அவர்கள் செய்த தவறுக்கு ஆயிரம் பதில்களை சொல்வார்கள் என ஹிட்லர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அரவிந்தகுமார் எம்.பியும் தெரிந்தே தவறு செய்துள்ளார். அந்த தவறை திருத்திக்கொள்வதற்காக எம்மால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் ஏற்கவில்லை. அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறு கேட்டோம். அவர் அதனை செய்யவில்லை.
இந்நிலையில் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை நாம் படிப்படியாக முன்னெடுத்தோம். இதனால், சிறு தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள இதர பங்காளிக்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதிருப்தியையும வெளியிட்டன. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மேற்படி தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகளும் குறித்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன.
அதேபோல அரவிந்தகுமார் எம்.பியை நான்தான் வழிநடத்துகின்றேன், அவருக்கு பின்னால் செயற்படுகின்றேன். அரசுடன் டீல் இருப்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எடுக்கவும்படாது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் எனக்கும் களங்கம் ஏற்பட்டது. தற்போது அந்த களங்கமும் நீங்கியுள்ளது .
எனக்கு அரசுடன் 'டீல்' இல்லை .எமது கட்சி அரசுடன் இணையாது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கும். தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். அரவிந்தகுமார் எம்.பியால் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.