இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் எந்தவொரு நீதி, நியாயத்திற்கான நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதல்ல என இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள 40 நாடுகள் உலகின் ஒரு பகுதியாகவே பிரதிநிதித்துவம் பெறுகின்றன. ஆசிய நாடுகளில் எந்த நாடும் அதில் கையெழுத்திடவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் ஒருநாடு மட்டுமே கையெழுத்திட்டுள்ளது, இந்த யோசனை என்பது ஒட்டுமொத்த உலக நாடுகளின் நிலைப்பாடல்ல என்பது இதில் புலப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.
இந்த ஊடகச்சந்திப்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
புலம்பெயர் சமூகத்தின் வசமுள்ள அதிகபட்ச பலமும், ஒருங்கிணைப்பு மற்றும் பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தியே இலங்கைக்கெதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டின் மக்கள், அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் இது பாதிக்காது. அத்துடன் தற்போதைய அரசாங்கத்திற்கெதிராக உள்ள எதிர்ப்பாகும். இதற்கு முன் இருந்த அரசாங்கத்திற்கு பாதுகாப்பு செய்ததுடன், முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அனைத்து நாடுகளையும் சமமான முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையை ஐ.நா மனித உரிமைப் பேரவை மீறுகிறது. மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்தல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயத்திலும் கடந்த அரசாங்கமே அதனை செய்தது. இதுகுறித்து ஜெனீவா அறிக்கையில் எந்த விமர்சனமும் காணப்படவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக ஜெனீவா அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் எந்த பிரதிபலன் வந்தாலும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கின்றேன். வாக்கெடுப்பில் என்ன நடந்தாலும் 70 ஆண்டுகளுக்கும் மேல் ஐ.நாவில் இருக்கும் நாடாக நாங்கள் எமது பொறுப்பினை சரிவர செய்வோம். ஐ.நாவுக்கு பெறுமதி சேர்க்கின்ற பணிகளை எமது நாடு நிறைவேற்றியுள்ளது. சிறந்த நட்புறவை ஐ.நாவுடன் தொடர்ந்தும் பேணுவோம். இருப்பினும் ஐ.நா உறுப்பு நாடுகள் மற்றும் ஜெனிவா ஆணையாளர் அலுவலகம் என்பவற்றுக்கு இடையே உள்ள விடயத்தை தெரிவித்தால், அந்த அலுவலகம் மிகவும் பக்கச்சார்பாகவே இலங்கை விவகாரத்தில் செயற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை குறைத்தே மதிப்பிட்டுள்ளதால் எமது கவலையை இதற்கு தெரிவிக்கின்றோம். அந்த அலுவலகம் மற்றும் விடயதானங்களை மீறியே ஆணையாளர் அலுவலகம் செயற்பட்டிருக்கின்றது. நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்ய ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்திற்கு முடியாது. இருப்பினும் அதனையும் அலுவலகம் செய்தது. இலங்கை மக்களே இதுகுறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். இலங்கை அரசின் செயற்பாடுகளை வெளிநாட்டமைப்புகளுக்கு கண்காணிப்பு செய்ய இடமளிக்க முடியாது. இலங்கையின் அரசியலமைப்பு மீறும் செயலாகவே இது அமையும். அதனை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் உள்நாட்டுப் பொறிமுறைக்கமையவே முன்னெடுப்போம். நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு என்பன இருந்ததோடு நவாஸ் ஆணைக்குழுவும் இப்போது உள்ளது. அந்த ஆணைக்குழுக்களுக்கு கௌரவம் அளிக்க வேண்டும். இதேவேளை அரசாங்கம் மற்றும் நாடு என்கிற வகையில் ஜெனீவா புதிய யோசனையில் உள்ள ஒரு பயங்கரமாக விடயம் உள்ளது. இலங்கைக்கெதிராக சாட்சிகளை சேகரித்து, ஆய்வு செய்யவும், அதிகாரிகள் நியமனம் மற்றும் நிதி ஒதுக்கீட்டையும் ஆணையாளரின் அலுவலகம் செய்கின்றது. இந்த செயற்பாட்டை ஐ.நா மனித உரிமையாளர் ஆணையாளர் அலுவலகத்தால் செய்ய இடமளிக்கமுடியாது. இதனை கண்டிக்கின்றோம். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் பிரதிபலன் என்னவாக அமைந்தாலும் எமது படையினரை நாங்கள் உயிர்த்தியாகம் செய்தேனும் நாங்கள் பாதுகாப்போம். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் படையினரை பாதுகாப்பதற்கான சட்டங்களை அமைத்துள்ளன. அதேபோன்ற சட்டங்களை நாங்களும் அரசியலமைப்பிலும், நாடாளுமன்றத்தின் ஊடாக உருவாக்குவோம்.