web log free
January 11, 2025

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை: வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில், 25 நாடுகள் இந்த பிரேரணை தொடர்பிலான எதிர் நிலைப்பாட்டில் உள்ளமை வெளிப்படையாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரேரணையை கொண்டு வந்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களினால் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் செயற்பட முடியாது என கூறிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறியே ஒருங்கிணைந்த நாடுகள் இலங்கை தொடர்பிலான பிரேரணையை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஐ.நாவினால் அறிவிக்கப்பட்ட நிலைபேரான அபிவிருத்தி இலக்கினை நோக்கி நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். சிங்களம், தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரையான போக்குவரத்து, சுதந்திரம், உரிமையை பாதுகாப்பு செய்கின்ற நாடாக மாற்றியிருக்கின்றோம். இவற்றை நிராகரித்து பிரித்தானியா கொண்டுவந்த தீர்மானம் மீது 47 நாடுகளிடையே 22 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன. 25 வாக்குகள் பயன்படுத்தப்படவில்லை. அவற்றில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அந்த வகையில் 25 நாடுகளின் அனுமதியினை பலம்வாய்ந்த நாடுகளால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Last modified on Tuesday, 23 March 2021 13:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd