web log free
December 05, 2025

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை: கடும் சிரமத்துக்கு மத்தியில் மீட்பு

நுவரெலியா - அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையகத்திற்கு உரித்தான சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போபத்தலாவ வனப் பகுதியில் பகுதியில் இன்று (24) காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை, கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வேட்டையாடுவோரினால் இந்த கம்பிவலை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கம்பி வலையில் சிக்கியதால் காயம் ஏற்பட்டிருந்த குறித்த சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி அதிகாரிகள் மீட்டனர்.

குறித்த சிறுத்தை கம்பிகளுடன், போபத்தலாவ அரச விளை நிலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு மேல் வீழ்ந்திருந்த நிலையில், மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுமார் 6 அடி நீளமான 9 முதல் 10 வயது மதிக்கத்தக்க மலையக பகுதிக்கு உரித்தான சிறுத்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலில் பாரிய காயங்கள் காணப்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்திய அதிகாரிகள், அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, சிறுத்தையை மீட்டுள்ளனர்.

போபத்தலாவ அரசாங்கத்திற்கு சொந்தமான வனப் பகுதியில் மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாளர்களினால் இந்த கம்பி கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த கம்பியிலேயே சிறுத்தை சிக்குண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd