எதிர்வரும் மார்ச் 26ம் திகதி கடற்றொழில் அமைச்சரின் யாழ்.மாவட்ட அலுவலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் வடக்கு மாகாண மீனவர்கள்.
அத்துமீறி இலங்கையின் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக இன்று (24) ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை, இந்தியா மீனவர்களது பிரச்சினைகள் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும் வாய்மூலமான உறுதி மொழியும் காலத்தினை கடத்தும் செயற்பாடுகளும் தான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். எங்களது வாழ்வாதாரங்கள் அல்லது வலிகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வடக்கின் நான்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ அமைப்புகளும் இணைந்து இன்று ஒரு கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தினோம். அதன் இறுதியில் முற்றுகைப் போராட்டத்தினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே, அரசியல் பிரமுகர்கள், முச்சக்கர வண்டிகள் சங்கம், பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் என அனைவரும் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றனர்.
இப் போராட்டத்தினை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம், பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், முல்லைத்தீவு மாவட்ட க.தொ.சங்க சமாசம், கிளிநொச்சி மாவட்ட க.தொ.சங்க சமாசம், மன்னார் மாவட்ட க.தொ.சங்க சமாசம் ஆகியோர் இணைந்து இந்த முற்றுகைப் போராட்டத்தினை நடாத்தவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.