இலங்கையின் பொறுப்புகூறல் குறித்து ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மீண்டும் அறிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் மீது விவாதத்தை நடத்துவதற்கான கோரிக்கை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டதால் பாரிய அமளிதுமளி ஏற்பட்டதோடு விவாதத்தை நடத்த சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் பகிரங்கப்படுத்தினார்.
முற்றுமுழுவதுமாக பக்கச்சார்பான தீர்மானமாகவே இதனை பார்ப்பதாகவும், தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எமது நாட்டு ஜனாதிபதியை கொலை செய்தது, இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தது, உள்நாட்டில் தமிழ் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. இப்படியான கொடூர அமைப்பினை எமது படையினர் அழித்தனர். இன்று நாடு பிளவுபடாமல் ஜனநாயக வழியில் உள்ளது. இதனை கவனத்திற்கொள்ளாமல் வெளிநாடுகளிலுள்ள சிறியளவிலான குழுவினர் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும்படி அழுத்தம் கொடுக்கின்றன. எமது அரசாங்கம் ஐ.நா.வுடன் தொடர்ந்தும் பணியாற்றக்கூடிய நிலைப்பாட்டில்தான் இருக்கின்றோம். இன்று மாகாண சபை முறை பற்றி பலரும் பேசுகின்றனர்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர், தோல்வி ஏற்படும் என நினைத்தும் வடக்கில் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அவர்கள் நிர்வகிக்க முடியாததை அடுத்து நிதியை மீளச்செலுத்தியதுமட்டுமன்றி, அரசாங்கம் மீதும் குற்றஞ்சாட்டினார்கள். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாகாண சபை தேர்தல் முறையை மாற்றவும் தமிழ்ப் பிரதிநிதிகள் வாக்களித்தார்கள். இது பாரதூரமானது, தேர்தல் நடத்தப்படாமலிருக்கலாம் என அன்று எச்சரித்தோம். இறுதியில் தேர்தல் முறை திருத்தத்தை கொண்டுவந்தார்கள். அரச தலைவர்-பிரதமரிடையே ஒத்துழைப்பு அற்ற அரசாங்கமாக மாறியது. இதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெரிவதில்லை. எனினும், எமது விளக்கத்தில் அவற்றை கூறியிருக்கின்றோம். கடந்த அரசாங்கமே தேர்தலை ஒத்திவைத்தது. ஏற்கனவே, ஜெனிவாவில் இருந்த இணை அனுசரணை தீர்மானம் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரண் என்பதை கண்டோம். இவற்றை திருத்தியமைக்கும் படியான மக்கள் ஆணை கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்தது. அதற்கமைய ஸ்ரீலங்காவை விடுதலையாக்கி, அநீதி ஏற்பட்டிருந்தால் அவர்கள் பற்றி விசாரணை செய்ய நீதியரசர் தலைமையிலான ஆணைக்குழுவை அமைப்பதாக தெரிவித்திருந்தோம். கோவிட் ஒழிப்பினை மிக திறமையாக எமது அரசாங்கம் செய்தது. அதனையும் தெரியாமல்தான் ஜெனீவா ஆணையாளர் தகவல்கள் தெரியாமல் குற்றஞ்சாட்டியிருந்தார்
நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, சர்வதேச பிரதிநிதிகளுடன் இலங்கை அரசாங்கத்தை களங்கப்படுத்த சிலர் உள்நாட்டிலிருந்து இரகசியமாக பேசி வருவமாக குற்றஞ்சாட்டினார்.
அதேபோல போர்க்குற்றம் மற்றும் காணாமல் போனோர் பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அதுசார்ந்த விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இறுதிப்போரில் படையினரால் கொலை செய்யப்பட்டிருந்தால் அதுபற்றி ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும். காணாமல் போயிருந்தால், அவர்கள் பிரித்தானியாவில் இல்லாவிட்டால், ஏனென்றால் பிரித்தானியா இன்னும் அங்கு குடியேறியவர்கள் பற்றிய தகவல்களை எமக்குத்தரவில்லை. அதுபற்றியும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும். ஜெனிவா தீர்மானம் முழுமையாக சட்டவிரோதமானது. இந்த தீர்மானத்தை மீண்டும் நிராகரிக்கின்றோம். ஒருதலைப்பட்சமாக உள்ள இந்த தீர்மானமானது, உள்ளக விடயங்களில் ஊடுருவும் வகையில் அமைந்துள்ளது. இறுதிப்போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விசாரணை மற்றும் ஸ்ரீலங்காவின் பாரிய வெற்றியைப் பெற்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிமுறை பற்றிய விமர்சனமாக இந்த தீர்மானம் காணப்படுகின்றது. இந்த தீர்மானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என எதிரணி கூறுகின்றது. எனினும் அவ்வாறு நடக்காது. சிலர் இரகசிய பேச்சுக்களை நடத்துவதாக அறிகின்றோம். ஐ.நா.வுடன் எமது நட்புப் பயணம் தொடரும் என்றார்.