web log free
January 11, 2025

54 இந்திய மீனவர்களை கைது செய்தமை குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களின் விவகாரம் குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துடன் கையாளப் போவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இந்திய மீனவர்களின் கைது உட்பட இருநாட்டுப் பிரச்சினைகள் பற்றி தொழில்நுட்ப உதவியுடன் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியிருந்ததை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கை அரசாங்கத்துடன் மேற்படி விவகாரம் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

2021 மார்ச் 24 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையால் இந்திய படகுகள் கையகப்படுத்தப்பட்டு 54 இந்திய மீனவர்களை கைதுசெய்தமை குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்படவேண்டிய விடயம் என நாம் வலியுறுத்துகின்றோம்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல் மற்றும் கொன்சியுலர் மட்டத்திலான உடனடி அணுகுமுறை ஆகியவற்றுக்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  இம்மீனவர்களுக்கான கொன்சியுலர் சேவைகளை துரிதமாக வழங்குவது குறித்து நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிவருகிறோம்.

மீன்பிடி தொடர்பான சகல விடயங்களையும் பரந்தளவில் கையாள்வதற்காக இருதரப்பு பொறிமுறைகள் நடைமுறையில் உள்ளன. மெய்நிகர் மார்க்கம் ஊடாக கடந்த 2020 டிசம்பர் 30 ஆம் திகதியன்று செயலாளர்கள் மட்டத்திலான கூட்டு செயலணியின் நான்காவது கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd