ஜெனீவா தீர்மானம் மீது விவாதத்தை எதிர்கட்சியினர் கோரிய போதிலும் அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன திட்டவட்டமாக நிராகரித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஐ.நா மனித உரிமைப் பேரவை மிகவும் பொறுப்பற்று செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் பாரிய கூச்சலுடன் சபையில் கருத்து வெளியிட்டனர். அதற்கெதிராக எதிர்கட்சிகளும் கருத்து வெளியிட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிடுகையில்,
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் 17 பக்கங்களைக் கொண்டது. அதில் இரண்டு பக்கங்களில் போர் பற்றி உள்ளதோடு, ஏனைய பக்கங்கள் அனைத்தும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடக்கும் மனித குலத்திற்கெதிராக, ஜனநாயக விரோத செயற்பாடுகளை விமர்சிப்பதாக உள்ளன.
ஜெனிவா ஆணைக்குழுவினை எமக்கு யார் அறிமுகப்படுத்தியது? 1989ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவே காணாமல் போனோர் பற்றிய தகவல்களை சேகரித்து ஜெனிவாவுக்கு சென்றவர். உள்நாட்டுப் பிரச்சினையை அவரே சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் இந்தக் கருத்து சபையில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜெனிவா தீர்மானம் மீது விவாதத்தை எதிர்கட்சியினர் கோரிய போதிலும், இன்றைய தினம் விவாதத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்பதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன திட்டவட்டமாக அறிவித்தார்.