இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். பிள்ளைகள் கல்வியால் உயர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இ.தொ.காவின் மகளிர் தின நிகழ்வுகள் அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சி.எல்.எவ். வளாக கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்றது.
உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ம் திகதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மகளிர் தினம் பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் மற்றும் விவாத போட்டிகளும் இடம்பெற்றது.
இதன்போது வருகை தந்திருந்த இ.தொ.கா வின் மூத்த தோட்ட தலைவிகளுக்கு இராஜாங்க அமைச்சரினால் பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இ.தொ.கா வின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன், உபதலைவர்கள், நகர மற்றும் பிரதேச சபை தலைவர்கள், மூத்த தலைவிகள், இ.தொ.கா வின் காரியாலய இணைப்பதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும், தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் இ.தொ.கா. என்பது ஒரு குடும்பம் என அடிக்கடி கூறுவார்கள். அந்த குடும்பத்தின் ஒற்றுமை சமூகத்தின் ஒற்றுமையாகும். ஊதிக உரிமையை வென்றெடுப்பதற்கான அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தின்போது அந்த ஒற்றுமை அனைவருக்கும் தெரிந்தது. காங்கிரஸின் பலம் என்றால் என்னவென்றும் புரிந்தது.
காங்கிரஸ் என்ற குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். பொருளாதார பிரச்சினைகள் தீர வேண்டும். எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு ஆர்வம் உள்ளது, பலர் பல்கலைக்கழகம் செல்ல விரும்புகின்றனர். எனினும், வறுமை என்பது இதற்கு ஒரு தடையாக இருக்கின்றது. அதனை நாம் தகர்க்க வேண்டும். புலமைப்பரிசில் திட்டங்களை உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளோம்.
பிரமாண்டமாக மேடை அமைத்து சினிமாப் படங்களில் போன்று மே தின நிகழ்வுகளை இனி நடத்த வேண்டியதில்லை. எளிமையாக நினைவு கூர்ந்தால் போதும். பிரமாண்ட நிகழ்வுகளுக்காக செலவிடும் நிதியை பிள்ளைகளின் கல்விக்காக செலவிட எதிர்ப்பார்க்கின்றோம். அது பலனுள்ளதாகவும், சமூக முன்னேற்றத்துக்கான விடயமாகவும் அமையும். சமூகம் மேம்பட்டால்தான் எனது சேவை குறித்து பெருமை, திருப்தி கொள்ளமுடியும் என்றார்.