இலங்கை படையினரையோ அல்லது அரசியல் தலைவர்களையோ சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாதென்று கல்வி அமைச்சரும் சட்ட மேதையுமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையில், எமது நாட்டை இலக்கு வைத்து ஐ.நா கட்டமைப்பின் சட்டங்களை மீறி கொண்டுவரும் நடவடிக்கைகளை நாம் நிராகரிப்பதுடன், எமது நாட்டிற்கு ஆதரவளித்த நாடுகளுடன் இணைந்து எமது நாட்டை பாதுகாப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது நாட்டிற்கு ஒரு சட்டமும், பிரித்தானியாவுக்கு இன்னுமொரு சட்டமே உள்ளது. போரின் இறுதிக்கட்டம் குறித்து உண்மையை கண்டறிய 2.8 மில்லியன் டொலர்களை செலவழிப்பதற்கு பிரிட்டனுக்கு எந்த அவசியமும் இல்லை. அவர்களிடமே சாட்சியங்களும் உள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் மே 19ஆம் திகதிவரை முழுமையான அறிக்கையொன்றை பிரித்தானிய அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார். அவர் கொழும்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்தவர். அவருக்கே போரின் நடவடிக்கை குறித்து முழுமையான அறிக்கையை பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்க அவருக்கு வழங்கப்பட்ட கடமையாகும். என்டன் கேஷ் என்ற குறித்த நபர் இலங்கை குறித்த பொறுப்புடையவர் அல்ல. அவர் பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரிந்தவர். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு தெளிவான அறிக்கையை வழங்குதலாகும். அவர் இதனை சரியாக செய்தார். அறிக்கை இன்றும் உள்ளது. குறித்த அறிக்கையில் எந்த குற்றமும் படையினரால் இழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் முன் எந்த பிழையும் ஏற்படவில்லை என அவர் அறிக்கையில் கூறியுள்ளார். குறித்த அறிக்கையை மறைப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
இலங்கை குறித்த விவகாரம் பற்றி பேசுகையில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இப்படிப்பட்ட பெறுமதியான சாட்சியமடங்கிய அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அத்துடன் நெய்ஸ்பி சுவாமி அவர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசியபோது, உண்மையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். பிரித்தானிய தகவல் உரிமை சட்டத்தின்படி அவர் மனுவொன்றை முன்வதை்தபோது அதனை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துவிட்டது. 03 வருடங்கள் இதற்காக முயற்சித்த போதிலும் அறிக்கை முழுமையாக கிடைக்கவில்லை. ஆகவே இதன் உண்மை நிலவரம் என்ன? உண்மையை மூடிமறைக்கவும், அந்த நாடுகளின் குறுகிய அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ளவும் இலங்கை மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர்.
தாருஸ்மன் என்பவர் ஐ.நா பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர். குறித்த அமைப்பானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக பான் கீ மூன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இலங்கைக்கெதிராக 4000 சாட்சியங்கள் பெற்றுக்கொண்டதாகவும், 2300 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், சாட்சியங்களை இரகசியமாக பாதுகாப்பதாகவும் அது 2031ஆம் ஆண்டுவரை அமுலில் இருக்கும் என்றும் தாருஸ்மன் தெரிவித்திருக்கின்றார். ஆகவே, இந்த விடயத்தை குறுகிய அரசியல் இலாபத்தை விட்டு நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் நாட்டின் படையினர் உட்பட நேரடியாக தாக்கம் செய்யும் நிலைமை என்பதால் ஓரணியில் திரண்டு நடவடிக்கை எடுப்போம் என்று வலியுறுத்துகின்றேன் என்றார்.