web log free
January 11, 2025

புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்படுபவர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும்: அமைச்சர் உதய கம்மன்பில

விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை செய்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், புலம்பெயர் தமிழ்  அமைப்புக்களுக்கு மாத்திரம் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூற முடியாது. எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.  அதற்கமைய அந்த அமைப்பிற்கு ஆதரவாக செயற்படுகின்றமை , ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிதி திரட்டுகின்றமை , கருத்துக்களை வெளியிடுகின்றமை என்பன தடை செய்யப்பட்டவையாகும்.

இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்படுபவர்கள் உள்நாட்டில் வசித்தாலும்,  வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும். 

அதற்கமைய நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்விக்கும் வகையில் செயற்படுதல் அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கருத்துக்களை முன்வைத்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட விடயங்களாகும் என்பதை உறுதியாகக் கூறுகின்றோம் என்றார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குவதற்கான எந்த வகையிலான கொள்கை அளவிலான தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று இலங்கை அரசின் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்திய மீனவர்களுக்கு இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் பற்றி ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று கூறினார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, 

இவ்வாறானதொரு தீர்மானம் பற்றி மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை. அமைச்சரவையிலேயே அப்படிப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும். இருப்பினும் நேற்று வரை இடம்பெற்ற அமைச்சரவையில் எந்த முடிவுகளும் இதுசார்ந்து எடுக்கப்படவில்லை. இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது போல இந்தியாவில் தடுப்பில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை செய்வது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுக்கும் என நம்புகின்றேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd