நுண்கடன் திட்டத்தினை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும், மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு,கித்துள் பிரதேசத்தில் நேற்று முன்னெடுத்தனர்.
நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிறுத்து நிறுத்து நுண்டகடன் திட்டங்களை நிறுத்து,பாதுகாப்போம் பாதுகாப்போம் நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாப்போம்,நுண்கடனை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதியே நடவடிக்கையெடுங்கள் போன்ற கோசங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
செங்கலடி-பதுளை வீதியில் கித்துள் சந்தியில் அமைதியான முறையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
கடனில் இருந்து விடுபட்டு எங்களையும் மனிதர்களாக வாழவிடு,வறுமையின் கோரப்பிடியில் வாழும் மக்களுக்கான நீதியை நிலைநாட்டு,நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு முன்னெடுக்கும் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு முழுமையான ஆதரவு வழங்குகின்றது,
இலங்கை நாட்டில் நுண்கடன் செயற்பாடுகளை முழுமையாக இரத்துச்செய்யவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
நுண்கடன் பெறும் நிறுவனங்களின் செயற்பாடுகளினால் இந்த நாட்டில் பல பெண்கள் தினமும் தற்கொலைசெய்யும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தனியார் நுண்கடன் திட்டங்களை நிறுத்தி அரச வங்கிகள் ஊடாக பெண்களுக்கான கடன்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.