மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ். திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்ல செய்திகள் தெரிவிக்கின்றன.
நல்லடக்கம் தொடர்பான செய்தி பின்னர் அறிவிக்கப் படும் எனவும் தற்போது புனித வாரம் அனுஸ்டிக்கப் படுவதனால் வருகின்ற திங்கட்கிழமை நல்லடக்கம் இடம் பெற வாய்பு உள்ளதாகவும் மேலும் தெரிக்கப்படுகிறது.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து இன்று வெள்ளிவிழாக் காண்கிறார்.
இவர் மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.
கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் யாழ். மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்வுநிலை ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை உட்பட இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மருதமடு அன்னை ஆலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
ஒரு கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார்.
சிறைகளில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார்.
யுத்தத்தால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு வாழ்வோதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவிகளைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார்.
யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர்துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.