நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியின் மீது, லொறியொன்று வீழ்ந்து குடைசாய்ந்ததினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பண்டாரவளை - எல்ல பகுதியைச் சேர்ந்த 18, 51 மற்றும் 52 வயதான மூன்று பெண்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரிய வளைவொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி, கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டி மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.