இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி அலுவலகத்தின் ஆலோசனைக்கமைவாக கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய கலந்துரையாடலில் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய தேவைகளாகவுள்ள கிராமிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், பல திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகளுக்கான தீர்வுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுணர் அநுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், ரொசான் லால் சிங்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முன்பள்ளி மற்றும் இராஜாங்க அமைச்சர் நிஸாந்த டீ சில்வா, மற்றும் மேலும் பல இராஜாங்க அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமாகிய நசீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய கோவிந்தனன் கருணாகரன், இரா.சாணக்கியன், பிரதேச அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது