தனிப்பட்ட முறையில் நான் மாகாண சபை முறைமைகளுக்கு எதிரானவன். ஆனால், தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று (03)பிற்பகல் மருதங்கேணியில் காவல் நிலையத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மருதங்கேணி காவல் அரணை காவல் நிலையமாக தரமுயர்த்தி புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண பிரதி போலீஸ் மா அதிபர் தலமையில் இடம் பெற்ற மருதங்கேணி பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவும், மீன் பிடி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட மற்றும் மாகாண போலீஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இரணுவ உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர். வடமராட்சி கிழக்கு பிரதாச செயலர் பிரபாகரமூர்த்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன், பொது அமைப்பு பிரதிநிதிகள் சர்வமத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பௌத்த பாரம்பரிய இசை முழங்க வெற்றிலை கொடுத்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டு தேசியக் கொடி, மாகாண பொலிஸ் கொடி, கிளிநொச்சி மாவட்ட கொடி என்பன ஏற்றப்பட்டு அதன் பின்னர் பௌத்த, இந்து, இஸ்லாமிய சர்வ மத பிரார்த்தனைகள் நிறைவுற்ற பின்னரே மருதங்கேணி காவல் நிலையம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பொது மக்களையும் சந்தித்து உரையாடினார்.