web log free
January 11, 2025

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இப்படி கூறாதீர்கள் :எம்.கே.சிவாஜிலிங்கம்

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஊடகவியலாளர்களின்  கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை. இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம். வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு பல்வேறுபட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

தந்தை செல்வா- பண்டா  ஒப்பந்தத்தில் கூட எதிர்காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்படாமல் இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1965ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில் கூட  இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வாழ்வியல் என குறிப்பிடப்பட்டுள்ளது. சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என  கூறுவது ஐனாதிபதி  சட்டத்தரணியாக இருக்கும் அவருக்கு விளங்கவில்லையா?  நான் அவருக்கு இனப்படுகொலை விடயம் தொடர்பில் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 1983 ல் இனத்தினை அழிக்கும் எண்ணத்தோடு இனத்தை அழிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனவே, இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை தெரிவு செய்து படுகொலை செய்ய நினைப்பது என்பதை நிரூபிக்க முடியும். உலகில் எத்தனையோ நாடுகளில்  இனப்படுகொலை நடைபெற்றமை  நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd