இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று (04)கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கண்ணாடி இழை படகு மூலம் இலங்கையைச் சேர்ந்த இருவர் சட்ட விரோதமான முறையில் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழுமக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் வட்டக்கண்டல் பகுதியை சேர்ந்த நாகேஸ் எனத் தெரிய வந்தது.
இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒருவர் வேலை தருவதாகக் கூறிய தமிழகத்திற்கு வரவழைத்தாக விசாரணைகளின் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச கடல் வழியாகத் தமிழகத்திற்குச் சட்ட விரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இவர்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.