நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, அக்கரப்பத்தனை - வோல்புறுக் பகுதியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடித்தளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மீது இன்று (04) பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். காயமடைந்த இருவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் ரவிகுமார் (வயது 43) என்பவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
தளம் வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இம் மூவர் மீதும் திடீரென மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவர்கள் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து பொலிஸாரும், பிரதேச வாசிகளும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த இருவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.