கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசாங்கம் எதிர்கட்சியிலுள்ள 10 உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றைய தினம் கூடிய ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்கட்சியினரது குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாளை மறுதினமும், வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் வெளியிட்ட கருத்திற்கும் அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டடார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த வாரத்தின் பணிகளை மாற்றியமைக்க முடியாது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நடைபெறவிருந்தது. 10 பேரின் பிரஜாவுரிமையை பறிக்க நடவடிக்கை எடுக்கவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை பிற்போடச் செய்யவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதனை இந்நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்காகவே இதனைக் கூறுகின்றேன். சூழ்ச்சி செய்து எதிர்கட்சியினரது குடியுரிமையை பறிக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எனினும், எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார். எதிர்கட்சியினர் கடமையை மறந்து செயற்படுவதாகவும், சாத்திரம் பார்த்தே எதிர்கட்சி செயற்படுவதாகவும் விமர்சித்தார்.