ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவிய மற்றும் அதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு எப்போது தண்டனை அளிக்கப்படும் என்பதை யாராலும் கூறமுடியாது என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தரான நாடாளுமன்றஉறுப்பினர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பு கூறவேண்டிய முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அண்மையில் ஊடகங்களுக்கு முன்பாக வலியுறுத்தியிருந்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னதாக குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, குற்றவாளிகள் மற்றும் சூத்தரதாரிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் எப்படி வழக்கு தாக்கல் செய்யமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த தாக்குதல் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது. 02 வருடங்களாகப் போகின்றது. தெரிவுக்குழு அமைக்கப்பட்டு பல விசாரணை நடத்தப்பட்டது. ஷானி அபேசேகர உட்பட அதிகாரிகளின் அறிக்கைகளிலும் சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடிக்கமுடியாமற் போனது. இது மதமொன்றை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட தாக்குதலாகும். அடுத்தது, முன்னாள் ஜனாதிபதியும் ஆணைக்குழு ஒன்றை அமைத்தார். ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரான நடவடிக்கைக்கு அறிக்கை சட்டமா அதிபரிடம் ஆட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக மற்றுமொரு துணைக்குழு அமைக்கப்பட்டு பின் அறிக்கையும் கையளிக்கப்பட்டது. இது செயற்பாடாகும். இதன் காலக்கெடு என எதுவும் கூறமுடியாது. ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன் அனைத்தும் முடிவடையும் என்றும் என்னால் கூறமுடியாது. வழக்கு தாக்கல் செய்வதாயின் சட்டமா அதிபர், வழக்கு தொடர்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்கிற தீர்மானத்திற்கு வரவேண்டும். அரசாங்கம், பொலிஸார் ஊடாக விசாரணை செய்து தகவல்கள் திரட்டப்பட்டு அவை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடு பூரணமாகியுள்ளது.
இந்த நிலையில் இறுதி நடவடிக்கை எப்போது, காலக்கெடு என்ன, யாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பது என்னால் கூறமுடியாது. அவசியமாக நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த தகவல்கள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன வழக்கு தாக்கல் செய்ய எம்மால் முடியாது. தகவல்களுக்கு அமைய சட்டமா அதிபர் திருப்தி கொண்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை அவர் ஊடாக எடுக்கப்படும். அது எமது பணியல்ல. அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்யாது. குற்றவாளிகளை நிரபராதிகளாக்கவும், நிரபராதிகளை குற்றவாளிகளாக்கவும் அரசியல்வாதிகளுக்கு முடியாது என்றார்.