இந்தியாவுடன் 13 பிளஸ் பற்றி பேசுபவர்கள் அதற்கு கீழ்மட்ட செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அதிகார பரவலாக்கம் வலியுறுத்தப்பட்ட போதிலும் , வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் வகையிலான செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தமிழ் கல்வி அமைச்சு காணப்பட்டது. எனினும், தற்போது மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 13 பிளஸ் பற்றி பேசுபவர்கள் அதற்கு கீழ்மட்ட செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளனர்.
சிறுபான்மையினர்களுக்கும் அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தியே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும், தற்போது அதிகார பரவலாக்கத்திற்கு பதிலாக அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் குறுகிய கால செயற்பாடுகளாகும். வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும். மாகாணசபைத் தேர்தலுக்கு நாம் தயாராகவே உள்ளோம். மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் ஊவா மாகாணத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவோம். மத்திய மாகாணத்திலும் பாரிய வெற்றியை ஈட்டுவோம். இதன் மூலம் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் பெற்றுக் கொள்வோம் என்றார்.