அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியிடச் செய்வதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான தாரக்க பாலசூரிய தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டபோது.
“இன்னும் மூன்றரை வருடங்களில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை வைத்து இப்போது எதிர்வுகூறல்களை வெளியிடுவது பொருத்தமாக அமையாது. நிச்சயமாக, எமது வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான். இப்போதே அதனை அறிவிப்பதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. வேறு வேட்பாளர் குறித்து இப்போது அறிவிக்க அவசியமில்லை. பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்திற்கமையவே ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகினார். பஷில் ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை தொடரமுடியும். அவசியமான நேரத்தில் அவர் நாடாளுமன்றத்திற்கு வரலாம். இப்போதே எதிர்வுகூறலை செய்யமுடியாது. அமைச்சர் விமல் வீரவன்ச அண்மைய நாட்களாக தெரிவித்த ஜனாதிபதிக்கு உயர் பதவி கட்சிக்குள் வழங்கப்பட வேண்டும் என்கிற விடயத்தை அவர் கட்சி சார்பாக யோசனையாக முன்வைத்திருக்கலாம் என்பதே எமது கருத்தாகும். எமக்கு இப்போதுள்ள பிரச்சினை, எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தை அமுல்படுத்துவதேயாகும். அரசாங்கத்திற்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை இன்றும் மூன்றரை வருடங்களுக்குப் பின்னரே பார்க்க முடியும்” என்று கூறினார்.