கிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதானசாலை, ஆசிரமம் மற்றும் தியான பூங்கா திறப்புவிழாவை முன்னிட்டு இன்று (11) பிற்பகல் விகாரையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றினார்
விகாரைக்கு சென்ற ஜனாதிபதி , சமயக் கிரியைகளில் கலந்துகொண்டதன் பின்னர் அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார்.
இன்று இடம்பெறும் சங்கைக்குரிய உடுவே தம்மாலோக்க தேரரின் பிறந்த நாள் மற்றும் நாளைய தினம் இடம்பெறும் தேரரின் தாயாரின் பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் அளிப்பதும் இந்த அன்னதான நிகழ்வின் மற்றுமொரு நோக்கமாகும்.
மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர்களான சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், அமரபுர மகாநிக்காயவின் அனுநாயக்க தேரர், கிருலப்பனை எலன் மெத்தினியாராம விகாராதிபதி சங்கைக்குரிய யோகியானே சோபித்த தேரர் ஆகியோரின் தலைமையில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
மல்வத்தைப் பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஜனாதிபதி நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார்.
அமைச்சர் சரத் வீரசேகர, பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு விசேட செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்ணான்டோ, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.