web log free
January 11, 2025

அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் வளமாக்க அரசாங்கம் செயல்படுகின்றது: பிரதமர் மகிந்த ராஜபக்ஸ

அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் வளமாக்க அரசாங்கம் செயல்படுகின்றது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்.

நம் நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே பழங்கால பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் முன்னுரிமை அளித்து, விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் கலாசார ரீதியாக மதிப்புமிக்க சமூக நடைமுறைகள் இந்த தமிழ் சிங்கள புத்தாண்டின் மூலம் நினைவு கூரப்படுகின்றது.

அரசாங்கம் வழங்கிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி ஒழுக்கமான மக்கள் என்ற வகையில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாக, இப்புத்தாண்டை இந்த அளவிற்கேனும் சுதந்திரமாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே, சுகாதார நடைமுறைகளை மனதில் கொண்டு நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

மக்கள் மீது சுமத்தப்படும் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்று, அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் வளமாக்க அரசாங்கம் செயல்படுகின்றது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

புதிய சிந்தனைகள் மற்றும் அபிலாஷைகளுடன் நாம் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்திற்கொண்டு, ஒரு வளமான நாட்டை நோக்கிய ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் எழுந்துள்ளது.

அதற்கு நம் ஒருவருக்கொருவர் இடையில் காணப்படும் உறவை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின்  முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற்பதற்கு இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.

இப்புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த வளமான ஆண்டாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் !

மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
பிரதமர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd