web log free
December 05, 2025

ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் மற்றுமொருவருக்கு காயம்

நுவரெலியா, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் (12) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலியானதாகவும் மற்றுமொரு பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்  ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியை சேர்ந்த குபேரன் கருணாகரன் வயது சுமார் 28 மதிக்கதக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது,

ஹட்டன் - விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அதே பக்கத்தில் நடந்து சென்ற மேற்படி இளம் குடும்பஸ்த்தர் மீது மோதியுள்ளது. குறித்த நபர் பஸ்ஸில் மோதுண்டு வீதியில் சென்ற பெண் மீது வீழ்ந்து நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு மீண்டும் வீதியின் பக்கம் வீழ்ந்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பஸ் சாரதி பஸ்ஸினை நடு ரோட்டில் விட்டு விட்டு இறங்கி பொலிஸ் நிலையம் நோக்கி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஆண் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd