பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பினை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை மத்திய மொத்த மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று (12) திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், மீன் சந்தை வளாகத்தினை பார்வையிட்டார்.
இதன்போது, வடிகான் கட்டமைப்புக்கள் செம்பையாக பராமரிக்கப்படாமல் இருப்பதனை அவதானித்த அமைச்சர், அதற்கான காரணத்தை வினவியதுடன் அதனை உடனடியாக திருத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கினார்.
மேலும், மீன் சந்தை வளாகத்தின் துர்நாற்றத்திற்கான காரணத்தையும் வினவினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள் சந்தைத் தொகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு வெளியேற்றும் கட்டமைப்பானது சுமார் ஒரு இலட்சம் லீற்றர் கழிவு நீரினை கொள்ளக்கூடிய வித்திலேயே அமைக்கப்படடுள்ளதாகவும், ஆனால் தற்போது நாளாந்தம் மூன்று இலட்சம் லீற்றர் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் மேலதிகமாக நீர் தேங்குவதாகவும் அதன்காரணமாகவே இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர். இதன் போது அங்கு வருகை தந்திருந்த பிரபல தனியார் நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர், இப்பிரச்சினைக்கு தமது நிறுவனத்தினால் தீர்வினைப் பெற்றுத் தர முடியுமன்று
தெரிவித்ததுடன் அதற்கு ஏற்படும் செலவில் 50 வீதத்தை செலுத்தினால் போது மெனவும் எஞ்சிய 50 வீதத்தினை தமது நிறுவனத்தின் செலவில் செய்து தருவதுடன் அதனை செலுத்துவதற்கு 60 மாதங்கள் கால அவகாகசம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் குறிப்பிட்ட 60 மாத காலப்பகுதியில் சகல பராமரிப்பு பணிகளையும் தமது நிறுவனமே இலவசமாக செய்து தருமெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயத்தை உரிய தரப்புடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஐஸ் உற்பத்தி மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் அதன் செயற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தார். இதற்கு பதிலளித்த அம்மத்திய நியைத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் செயலிழந்து போயிருந்த ஐஸ் துகள்கள் தயாரிக்கும் பகுதியின் திருத்த பணிகளில் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சிய 20 வீதம் ஓரிரு நாட்களில் நிறைவடைந்தவுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும், மீன்களை வெட்டுவதற்கான பிரிவொன்று ஏற்படுத்தப்படுவது உட்பட பல்வேறு கோரிக்ககைகள் அதிகாரிகளினால் அமைச்சரிடம் முன்வைப்பட்டது. அதிகாரிகளின் கருத்துகளை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி நடவடிக்ககை மேற்கொள்ள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.