தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் கடந்த 1515 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சித்திரை வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து,
இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாகக் கண்டறிந்துள்ளோம்.
எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்கள பொதுமக்கள், அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் .
பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர்.
இப்போது, அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐ.நா.வில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
எனவே, அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறோம். இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.
இலங்கையில் அமெரிக்க தலையீட்டைக் கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும். இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே என்றனர்.