ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல் குவைதா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்துள்ள இலங்கை அரசாங்கம், மேலும் பல அமைப்புக்களையும், நபர்களையும் விரைவில் தடைசெய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஹிட்லரைப் போன்ற ஆட்சிமுறை இலங்கைக்கு பொருத்தமானது என்று தெரிவிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தவே சர்வாதிகாரி ஹிட்லரை உதாரணப்படுத்தி கருத்து வெளியிடப்பட்டதாகவும் கூறினார்.
கொழும்பு - முல்லேரியா பகுதியில் இன்றைய தினம்(15)) புத்தாண்டை முன்னிட்டு பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவும் கலந்துகொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் ஹிட்லரைப் போன்ற ஆட்சிமுறை இலங்கைக்கு அவசியம் என்று கூறிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தரான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் கருத்தை நிராகரித்து கருத்து வெளியிட்டார்.
ஒரு விடயத்தை கூறினால் அதன் வார்த்தைகளைக் கொண்டு புரிந்துகொள்ளக்கூடாது. அப்படியான கருத்தை தெரிவித்தது யார் என எனக்குத் தெரியாது. இருப்பினும் எமது நாட்டில் ஒழுக்கம் என்பது வீழ்ச்சியடைந்திருக்கிறது. உதாரணமாக, வீதிகளில் பின்பற்றப்படாத சம்பவங்களை சுட்டிக்காட்ட முடியும். ஜனவரி முதல் இதுவரை 590 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்திருக்கின்றனர். வீதிச் சட்டங்கள் மீறப்பட்டதன் பிரதிபலனே இவை. ஆகவே, அப்படியானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கமையவே இதுபோன்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கலாம். மாறாக, சாதாரண மக்களுக்கு இடையூறு செய்வதற்கல்ல. போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், பாதாள உலகச் செயற்பாடு என்பவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களின் கைகளைக்கூட சவூதி அரேபியா துண்டிக்கின்றது. இருப்பினும், எமது நாட்டில் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படாது. எனினும், சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தினை மையப்படுத்தியதாகவே குறிப்பிட்ட நபர் அவ்வாறு தெரிவித்திருக்கலாமே ஒழிய ஹிட்லரைப் போன்ற ஆட்சிமுறை வேண்டும் என்பதற்கல்ல.
இது ஜனநாயக நாடு. மக்களே தலைவர்களைத் தெரிவுசெய்கின்றனர். அந்த வார்த்தைகளை மாத்திரம் பிடித்துக் கொள்ளாமல், நாட்டில் தற்போது ஒழுக்கவீனம் ஏற்பட்டிருப்பதை பார்ப்போம் என்றார்.
இதேவேளை இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர, மேலும் பல அமைப்புக்களை இலங்கையில் தடைசெய்யப் போவதாக தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் பாதுகாப்பு அமைச்சில் பேச்சு நடத்தப்பட்டே ஏற்கனவே 11 அமைப்புக்களை தடை செய்திருக்கின்றோம். இன்னும் பல அமைப்புக்கள் மற்றும் நபர்கள் இருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் பிரிவுகளுக்கமைய முழுமையாக தடைசெய்ய வேண்டிய அமைப்புக்கள் உள்ளன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அந்த அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டிருந்த நிலையில்தான் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கியது. இருப்பினும், தீவிரவாத அமைப்புக்கள் மீது தடை விதிக்கின்றதைப் போலவே, அதற்கு உதவிபுரிகின்றவர்களின் சொத்துக்களையும் முடக்கப் பார்க்கின்றோம். ஐ.எஸ் .ஐ.எஸ் என்பது ஒரு தீவிரவாத அமைப்பல்ல, மாறாக, அடிப்படைவாத அமைப்பாகும். சாதாரண பொதுமக்களாக அவர்கள் செயற்படலாம். ஆகவே, பொதுமக்களின் உதவி அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அவசியமாகின்றது. ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் வழக்கு தொடரவேண்டியமைக்கான அனைத்து ஆவணங்களும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவை சிரேஷ்ட சட்டத்தரணிகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சிறிது நாட்களில் அல்லது சில வாரங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்றார்.