web log free
January 11, 2025

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு காயம்

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் முன்பாக டிப்பர் வாகனம் அதிரடிப்படையினரை மோதியதாகவும் அதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இது குறித்து படைத்தரப்பால் தெரிவிக்கப்படுவதாவது,

சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வீதியில் ஆணிகள் பொருத்தப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வாகனங்கள் குறித்த தடைகளையும் தாண்டியதுடன் தம் மீதும் மோதியதாகவும், அதன் பின்னரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மணல் ஏற்றிவந்தவர்களாக கருதப்படும் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்தவர்களின் உறவினர்கள் உட்பட்டவர்கள் பெருமளவில் வைத்தியசாலை வளாகத்தில் கூடியிருப்பதால் வன்முறைகள் ஏற்படலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd