பதுளை – ஹல்துமுல்ல, வெலிஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹல்தமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயாவில் நேற்று வியாழக்கிழமை மாலை நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கொழும்பு - மஹரகம பகுதியைச் சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட குடும்பத்தினர். சித்திரை புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு பதுளை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன், மீண்டும் கொழும்புக்கு வந்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெலி ஓயாவில் இவர்கள் நீராடிக் கொண்டிருக்கும் போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. பின்னர் நால்வரும் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் இருவரை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர்.
எனினும், தந்தையும் மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலையே தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், இன்று வெள்ளிக்கிழமையே அவர்களிருவரதும் சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.
சம்பவத்தில் 52 வயதுடைய தந்தையும், அவருடைய 17 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.