web log free
January 11, 2025

நகைச்சுவை நடிகரான விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்  காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (16)  அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 அளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜூ சிவசாமி கூறுகையில், ''நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது விவேக்குக்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை. உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. விவேக்கின் உடல்நிலை மோசமாக இருந்தது. விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார். 

59 வயதான விவேக், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961-ல் பிறந்தவர் நடிகர் விவேக். சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில்தான், Madras Humour club-ல் அவர் செய்த காமெடி நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அதன் வழியான தொடர்புகளே, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் அறிமுகத்தையும் பெற்றுத்தர பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் விவேக். அதன்பிறகு அவருக்கு 1987-ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்தார் பாலச்சந்தர். அதன்பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விவேக், உழைப்பாளி, வீரா போன்ற படங்களால் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகராகவும் ஆனார். ஒரு நடிகராக விவேக்கிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் 'காதல் மன்னன்'. அதன்பிறகு, அவர் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதனால், 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் மட்டுமே சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் விவேக். அஜித் உடன் வாலி, விஜய் உடன் குஷி என முன்னணி நடிகர்களின் படங்களின் வரத் தொடங்கிய விவேக், தன் காமெடியில் கருத்தையும் முன்வைக்கத் தொடங்கினார். அதற்கு ரசிகர்களிடத்தில் கிடைத்த வரவேற்பே, சின்னக் கலைவாணர் என அவர் அழைக்கப்படவும் காரணமானது.

அந்நியன், சிவாஜி என தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்புகளிலும் காமெடியனாக கலக்கிய விவேக்கின் திரை வாழ்க்கையில் 'படிக்காதவன்' திரைப்படம் மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் Don-ஆக வரும் அவரது காமெடி எப்போது பார்த்தாலும் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

காமெடி நடிகராக மட்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விவேக் முத்திரை பதித்திருக்கிறார். அதேபோல், கதையின் நாயகனாகவும் வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் விவேக்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது.

திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக்.

சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளை ஆர்வத்துடன் முன்னெடுத்து வந்தார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமினால் ஈர்க்கப்பட்ட விவேக், அவரது வழி நடத்தலில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டதுடன், பாடசாலைகள்  கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 இலட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக் உடல் இன்று (17) இன்று மாலை 05 மணியளவில் சென்னை மேட்டு குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd