web log free
January 11, 2025

தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுடன் இ.தொ.கா பேச்சு: ஜீவன் தொண்டமான்

தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (20) தெரிவித்தார்.

சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பளார் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டின் மூலம் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் இலக்காக கொண்டு நுவரெலியா பருவகால கொள்வனவு தொகுதியில் பிரஜா ஷொப்பிங் விற்பனை குடில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நேற்று (19) அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் அரசாங்கத்தால் இரு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மேற்படி யோசனைகள் சிறுகட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்பதால் அவற்றை இ.தொ.கா. நிராகரித்திருந்தது. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

" சிறுபான்மையின மக்களுக்கு எதிராக திட்டம் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கத்தின் தரப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவை குறித்து எமது அபிப்ராயம் கோரப்பட்டது.

அதன்போது திட்டங்களை ஏற்கமுடியாது என நாம் குறிப்பிட்டோம். இதனையடுத்து எமது திட்டத்தை முன்வைக்குமாறு கோரினர். எனவே, இன்னும் ஒரிரு நாட்களில் அனைத்து சிறுபான்மையின் கட்சிகளையும் தொடர்புகொண்டு, நியாயமான திட்டத்தை முன்வைப்போம். " - என்றார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd