இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் இந்தியா ஆதரிக்கிறது என்றும் இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படி அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை இது உள்ளடக்கியது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து இன்றைய தினம் பதிலளித்திருக்கும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, இந்தியா, பாகிஸ்தானுக்கு ஏற்றவகையில் தேர்தலை நடத்தமுடியாது என்று கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மாகாண சபைத் தேர்தலை நாங்கள் இந்தியாவின் அல்லது பாகிஸ்தானின் தேவைக்காக நடத்தமாட்டோம். தேர்தலை நாங்கள் நடத்துவோம். தொகுதி வாரியாக நடத்த உத்தேசித்திருப்பதோடு, அதற்கான சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம். அப்போது யோசனைகளை முன்வைக்க முடியும். ஒரு தொகுதிக்கு 03 வேட்பாளர்கள் போட்டியிட முடியும். ஒருவர் போட்டியிட்டால் கட்சிக்கான வாக்குகளே அளிக்க முடியும். அதனூடாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காதுகேட்காத, கையெழுத்து இடமுடியாதவர்கள்கூட வெற்றிபெற்றனர். அதனை தவிர்ப்பதற்காக இந்த மாற்றுவழியை அறிமுகப்படுத்துகின்றோம். நாளைய தீர்மானத்தை இன்றே எடுக்கின்ற கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ மிகவும் வெற்றிகரமான வழியை அறிமுகஞ்செய்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிசெய்வோம் என்றார்.