இலங்கையில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (21) ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார். ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.
இதன்படி மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
அத்துடன், தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில், ஹட்டனில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் அருட்தந்தை தேவதாசன் செங்கன் தலைமையில் இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 03 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்டத்திர ஹோட்டல்கள் 03 உள்ளிட்ட 07 இடங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் 260 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.
சிறு குழந்தைகள், பெண்கள், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அடங்கலாக 503 பேர் கடுமையாக காயமடைந்ததுடன் பலர் அங்கவீனமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.