உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஈராண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தாம் சூத்திரதாரிகளுக்கு மன்னிப்பு வழங்க தயார் என்ற போதிலும், குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யார் என்பதே பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மற்றும் தற்போதுள்ள அரசாங்கம் ஆகியன நடந்திய விசாரணைகளில் முன்னேற்றம் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை அம்பலமாகும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொளடுப்பதற்கான குரலும், போராட்டமும் தொடரும் என்பதை கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகை அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனர்களாகி சக்கரக் கதிரையில் அமர்ந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இந்த செயற்பாடு தாமதமாவதுவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி இன்று மாலை மிகப்பெரிய பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கத்தோலிக்க தலைவர்கள் இணைந்துகொள்கின்ற இந்தப் பேரணி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக இன்று மாலை 3.45 அளவில் ஆரம்பமாகும் என கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்