இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் அதாவது 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட இருண்ட தினத்தின் ஈராண்டு நிறைவை மிகுந்த அனுதாபத்துடன் நினைவு கூருகின்றோம். அன்று உயிர்த்த ஞாயிறு தின வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் உள்ளிட்ட 259 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைத்து அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.
அத்துடன், தாக்குதலின்போது காயமடைந்த மற்றும் ஊனமுற்ற நூற்றுக்கணக்கானோர் உடல், உள ரீதியாக பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்த, ஊனமுற்ற மற்றும் காயமடைந்த அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் பிற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ சட்டமா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக இவ்விடயத்தில் நாம் தலையீடு செய்யாவிடினும், அச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராகவிருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
அத்துடன் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக செயற்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு ஆகியவற்றின் விசாரணைகளை சுயாதீனமான முறையில் முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகளை ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவ்விசாரணைகளின் இறுதியில் அந்தந்த திணைக்களங்களின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம்.
கடந்த அரசாங்கத்தினால் குற்றங்கள அலட்சியம் செய்யப்பட்டமையினாலும், தேசிய பாதுகாப்பையும், தமது அரசியல் நடவடிக்கைகளையும் குழப்பிக் கொண்டமையினாலும் இறுதியில் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்களே ஆகும். இன்றும், தாக்குதலுக்கு காரணமான தரப்புகள் பல்வேறு பொய்களை சமூகத்தில் பரப்பி, விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் சமூக கவனத்தை திசை திருப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். நாம் அவர்கள் குறித்து வருந்துகின்றோம்.
மேலும், உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் அதே வேளை, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை இனி எப்போதும் ஏற்படாது தடுக்க ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அத்துடன், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன்னிறுத்த நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.