web log free
January 11, 2025

கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை: மக்கள் அச்சம்

கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து குறித்த பகுதிக்கு அழைத்து வரப்பட்ட  வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் நாகராஜா செந்தில்குமரன் என்பவரது குடியிருப்புக்குள்ளேயே இவ்வாறு சிறுத்தை நுழைந்துள்ளது. குறித்த நபரின் வீட்டு வளர்ப்பு நாய் வழமைக்கு மாறாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதற்கு அமைவாக குறித்த நபர் சுற்று சூழலை பார்வையிட்டு்ளார்.

நாய் குரைக்கு திசையில் குறித்த சிறுத்தை அச்சத்தின் மத்தியில் மரத்தின் மீது ஏறி இருப்பதை அவதானித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து குறித்த பகுதியில் படையினர் சிறுத்தையை அவதானித்ததுடன், சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, அங்கு வருகை தந்த வன ஜீவராசி திணைக்களத்தினர் குறித் சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டதுடன், நீண்ட முயற்சியின் பின்னர் சிறுத்தை வெளியேறியது.

குறித்த பகுதி நகரை அண்மித்த பகுதியாக காணப்படும் நிலையில் அப்பகுதிக்கு சிறுத்தையின் பிரவேசம் தொடர்பில் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கனகாம்பிகை பகுதியின் ஊடாக குறித்த சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.

குறித்த சிறுத்தையினால் மனிதர்களிற்கு நேரடியான பாதிப்பு ஏற்படாது என வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், கால்நடைகள், சிறுவர்கள் உள்ள பகுதியில் இவ்வாறு சிறுத்தை நுழைந்தமை தொடர்பில் அப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்றது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd