மலையக மக்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் நேற்று (25) பதுளை ரிவ் சைட் விருந்தகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணத்திற்கான புதிய காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்,
இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பல பாடசாலைகளில் நிலவும் காணி, கட்டிடம், தளபாடங்கள், பெளதீக வளங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகளை தீர்ப்பதற்கு முதற்கட்டமாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். நுவரெலியா கண்டி மாத்தளை ஆகிய மாவட்டங்களையும் மலையகத்தின் ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
அத்தோடு மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக விடுக்கப்பட்டு வரும் நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அரசியல் பேதமின்றி சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும். மலையக கல்வி சமூகத்தின் இவ் வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.