உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மேலும் சிலரை எதிர்காலத்தில் கைது செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் நுவரெலியாவில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறினார்.
மேலும், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைக்கமையவே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாறாக, ஏதேச்சையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மக்களுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நியாயத்தை வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளதாகவும், அதனை நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆகவே, ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல எனவும் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார். அவர் தாக்குதலுடன் தொடர்புபடவில்லையாயின் எதிர்காலத்தில் அவருக்கு பிணை வழங்கப்படும் எனவும், அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவருக்கு தண்டணை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.