சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு (27) கொழும்பை வந்தடைந்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சருடன் 37 பேர் கொண்டு சீன உயர் அதிகாரிகள் குழுவினரும் நேற்றிரவு 10.50 மணிக்கு சீன விமானப்படையின் பி -4026 சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சீன பாதுகாப்பு அமைச்சரும் அவரது தூதுக்குழுவும் நாளை(29) வரை நாட்டில் தங்கியிருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவரது பயணமானது அரசியல் தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகரிப்பது மாத்திரமன்றி இராணுவ தொடர்புகள் பற்றியும் அவதானம் செலுத்தும்.
இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கை வருவதற்கு முன்னர் வெய் ஃபெங், நேற்று காலை ஒரு குறுகிய பயணமாக பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
2018 மார்ச் 19 அன்று 13 ஆவது தேசிய மக்கள் காங்கிரசில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் தலைவராக ஜெனரல் வெய் ஃபெங் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.