அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவின் Geelong பகுதியைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் அண்மையில் கார் விபத்தொன்றில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பின்னணி கொண்ட 38 வயதான நிக்சன் என்பவரே கடந்த 20ம் திகதி மரணமடைந்துள்ளதாக விக்டோரிய தமிழ் சங்கத்தைச் சேர்ந்த திரு.பரமநாதன் தெரிவித்தார்.
Geelong-இல் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த இவருக்கு இரண்டு, ஐந்து, எட்டு மற்றும் பதின்மூன்று வயதுகளில் நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
முழுக்குடும்பமும் நிக்சனின் வருமானத்தில் தங்கி வாழ்ந்ததாகவும் திடீரென இவர் மரணமடைந்துள்ளதால் குடும்பத்தினர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் திரு.பரமநாதன் குறிப்பிட்டார்.
படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிக்சன் குடும்பத்தினரின் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு Centrelink கொடுப்பனவும் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நிக்சனின் இறுதி நிகழ்வு எதிர்வரும் மே 8ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகவும், இறுதி நிகழ்விற்குக் கூட பணமில்லாத நிலையிலேயே அவரது மனைவியும் குடும்பமும் உள்ளதாகவும் திரு.பரமநாதன் குறிப்பிட்டார்.